Amazon Amazing Deals Now!! Mobile Phones from Rs.1/-(EXCLUSIVE SALE)

மனிதர்களின் முடிவுகள் - சீன கதை

இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர்.
இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது. கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது.
அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன்,”இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான்.
அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு,”நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.
அந்த கிழவன்,”அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான். மக்கள்,”எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர். அந்த கிழவன்,”லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான். மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர்.
அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது. பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர். அந்த கிழவன்,”மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார்.
இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர். அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள்,”நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.
அந்த வயதானவன்,”நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான். இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து,”நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர். அந்த வயதானவன்,”உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார்.
நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

Comments

Popular posts from this blog

Top 10 Smartphones under Rs 10,000 in India (2017) | Best Gadgetry | Latest Phones

40 Most Famous Leonardo Da Vinci Paintings and Drawings

What is GST? Goods & Services Tax Law - GST Easily Explained